தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்த திமுக போட்டியிடும் 21 இடங்களில் மட்டும் அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிகின்றது.
இந்தியா பாராளுமன்றத்திற்கான தேர்தல் பல கட்டங்களாக நடக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதிமுக தலைமையில் பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மதிமுக ஆகியன உள்ளன.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தங்களது தேர்தல் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றன. தமுமுகவின் சகோதர அமைப்பான மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைக் கேட்டுப் போராடியது. ஆனால் அதில் தோல்வியடைந்ததால் தனித்து போட்டியிடும் என்று தெரிகின்றது. அதிமுக கூட்டணிக்கு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளது. இரட்டை இலையில் போட்டியிட ம.நே.ம.கட்சி மறுப்பு தெரிவிக்கின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்களின் வலுவான ஓட்டு வங்கியைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக்குழு இன்று கோவையில் கூடியது. இதில் தமிழக முஸ்லிம்களின் நெடுநாள் கனவாக இருந்த இட ஒதுக்கீடை அளித்து முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுகவிற்கு அது போட்டியிடும் 21 தொகுதிகளிலும் ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதற்கு மேல் நடவடிக்கை வேண்டும் என்று கூறி சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அதை செயல்படுத்தாமல் பல வருடங்களாக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே அதைக் கண்டித்து காங்கிரஸுக்கு ஆதரவளிக்கவில்லை. அதே போல் பா.ம.க போட்டியிடும் இடங்களில் பாமகவின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அதற்கும் ஆதரவில்லை.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நிலவும் சிக்கல்கள் நீக்கப்படும் வகையில் எழுத்து பூர்வமான உறுதிமொழிகளை திமுக அரசு முஸ்லிம்களுக்கு அளிக்கும்பட்சத்தில் திமுகவிற்கு ஆதரவாக 21 தொகுதிகளிலும் களப் பிரச்சாரம் செய்யப்படும் எனவும் அது தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.
தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவும் கிடையாது எனவும் TNTJ முடிவு செய்கின்றது.