மதுரையில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!

சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு ரூ 30 ஆயிரம் பரிசு மாவட்ட அளவில் இரத்த தானத்தில் முதலிடம் பிடிக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு முறையே ரூ. 15 000 ரூ. 10 000 ரூ. 5000 என்றும் கிளை அமைப்புகளில் ஒரே முகாமில் 100 பேர் இரத்ததானம் செய்தால் அக்கிளைக்கு டிஎன்டிஜே ஷீல்டு' வழங்கப்படும
மேலும் கிளைகளுக்கு ரூ 15 ஆயிரம்!
செயற்குழுவில் மாநில நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!



மதுரை காமராஜர் சாலையிலுள்ள 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' அரங்கில் கடந்த 17-08-08 அன்று நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எம்.ஐ. சுலைமான் தலைமையில் கூடியது. இச்செயற்குழு கூட்டம் நிர்வாகரீதியான குறை நிறைகளை அலசியும் பல்வேறு முக்கியத் தீர்மானங்களை இயற்றியும் எழுச்சிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. விறுவிறுவென அரங்கத்திற்கு வந்த செயற்குழு உறுப்பினர்கள் ரூபாய் 25 செலுத்தி செயற்குழு கூட்டத்திற்கான அனுமதி அட்டைகளை வாங்கி சட்டை யில் குத்திக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த வண்ணம் இருந்தனர்.

காலை 10.15 மணிக்குத் துவங்கிய மாநில செயற்குழுவில் ஜமாஅத்தின் மூத்த தலைவர் மவ்லவி ஷம்சுல் லுஹா ரஹ்மானி துவக்க உரையாற்றி செயற்குழு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் நிர்வாகத்திற்கு கட்டுப்படுவதின் அவசியம் பற்றி விளக்கமளித்துப் பேசியதுடன் நிர்வாகிகளிடத்தில் இருக்க வேண்டிய இக்லாஸ்' என்னும் தூய்மை பண்பாடு ஒழுக்கம் ஆகிய பண்புகளே மறுமையில் வெற்றி அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.

மவ்லவி ஷம்சுல்லுஹாவைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய மாநிலத் துணைத் தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு சொந்த இடம் வாங்கும் திட்டம் கைவிடப்பட்டது பற்றி மாநிலத் தலைமை நிர்வாகக் குழு எடுத்த முடிவை செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கிப் பேசினார்.

'தஞ்சை வல்லத்தில் நடந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்காக வளைகுடாவில் வசிக்கும் சகோதரர்கள் பலர் ஒரு மாத இரண்டு மாத சம்பளத்தைக்கூட நன்கொடையளித்திருந்தனர். சில இடங்களில் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களிடம் நன்கொடை கேட்டு வர மாட்டோம்' என வளைகுடா நிர்வாகிகள் அங்குள்ள சகோதரர்களிடம் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். இந்தச் சூழலில் தலைமையத்திற்கு சொந்த இடம் வாங்க மீண்டும் அம்மக்களிடத்தில் போய் நிற்பது அவர்களை சிரமத்திற்குள்ளாக்குவதாக அமையும். இது தவிர இதற்காக உழைக்க ஆரம்பித்தால்... சுமார் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை அனைத்து நிர்வாகிகளுமே இந்த விஷயத்திலேயே கவனம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். 'கடந்த பொதுக்குழு வில் தாஃவா பணியை வேகப்படுத்துவோம் என வாக்குறுதியளித்தபடி நடக்க முடியாமல் தாஃவா பணிகள் மார்க்க விஷயங்களில் பின்னடைவை சந்திக்க நேரிடும். கொஞ்ச காலம் அவகாசம் எடுத்து அதன்பின் தலைமைக்கான சொந்த இடம் பற்றிய விஷயத்தைக் கையிலெடுத்தால் இலகுவாக அதை செயல்படுத்த முடியும். ஆகவே சிறிது காலத்திற்கு இத்திட்டத்தை மாநிலத் தலைமை தள்ளி வைத்திருக்கிறது'' என்று விளக்கிய அல்தாஃபி இந்த வகைக்காக தலைமையகத்திற்கு வந்திருக்கும் தொகை ஒரு வருடமாக கையிலுள்ளது.



இந்த நிலையில் சொந்த இடம் வாங்காமல் இருந்தால் மக்களிடையே தவறான எண்ணம் உருவாகிவிடும் என்பதால் நிறுவனத் தலைவர் பீ.ஜே. அவர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கிய தொகையை சம்பந்தப் பட்டவர்களிடமே திருப்பித் தந்துவிட முடிவு செய்திருக்கிறது மாநில நிர்வாகம்'' என்று நீண்ட விளக்கமளித்துப் பேசினார்.

மாநிலத் தலைமையின் இந்த முடிவை செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கெண்டதைத் தொடர்ந்து தனது உரையை மேலும் தொடர்ந்த அல்தாஃபி "இதுவரை மூன்று மாவட்டங்களில் மட்டுமே தர்பியா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் தர்பியாவிற்கு மூடு விழா நடத்தப் பட்டுள்ளது. அதனால் இனி எந்தக் கிளையிலாவது பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் அதற்கு முன் அக்கிளையில் இரண்டு தர்பியாக்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்'' என்ற மாநில நிர்வாகத்தின் நிபந்தனையைத் தெரிவித்து தர்பியா நடத்தப்பட வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மாநிலத் தலைவர் எம்.ஐ. சுலைமான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அவர் தாஃவா பணியின் முக்கியத்துவம் தர்பியாவின் அவசியம் குறித்து விளக்கிப் பேசியதோடு நிர்வாகிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தனி நபர் அழைப்புப் பணி அண்டை வீட்டார் வியாபார நண்பர்கள் போன்றவர்களிடம் மேற் கொள்ள வேண்டிய தாஃவா பணி குறித்த கருத்துகளை நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தபோது இடையிடையே வலியுறுத்திப் பேசினார்.

மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது பேசுகையில் 'பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளாக பதினோரு பேர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பத்து நிர்வாகிகள் மட்டுமே அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டு தொடர்புள்ளவர்கள் நிர்வாகத்தில் இருப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு ஜித்தா மண்டலத்தில் ஜமாத்திற்காக பல ஆண்டுகளாக பாடுபட்ட முத்துப்பேட்டை முஹம்மது ஷிப்லியை மாநிலச் செயலாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து அவரிடம் வெளிநாட்டுத் தொடர்பை வழங்க தற்போதையை நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது'' எனக் கூறி 'இதனை ஒப்புக் கொள்கிறீர்களா?'' எனக்கேட்டார். 'அல்லாஹு அக்பர்'' என்ற தக்பீர் முழக்கத்துடன் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

'தாஃவா பணிகளில் சிறந்து விளங்கும் மாவட்ட அமைப்புகளுக்கு ரூ. 30 000 மதிப்பிலான - மாவட்ட நிர்வாகம் விரும்பும் தாஃவா தொடர்பான பொருட்களும் கிளை அமைப்புகளுக்கு ரூ. 15 000 மதிப் பிலான தாஃவா தொடர்பான பொருட்களும் மாநிலத் தலைமையால் வழங்கப்படும்'' என தாஃவா பணிகளை அதிகப்படுத்துவதற்காக மாநில நிர்வாகம் முடிவு செய்த திட்டத்தை மாநிலத் தலைவர் எம்.ஐ.சுலைமான் அறிவித்தார். அதேபோல் இரத்த தானத்தை ஊக் குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் இரத்த தானத்தில் முதலிடம் பிடிக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு முறையே ரூ. 15 000 ரூ. 10 000 ரூ. 5000 என்றும் கிளை அமைப்புகளில் ஒரே முகாமில் 100 பேர் இரத்ததானம் செய்தால் அக்கிளைக்கு டிஎன்டிஜே ஷீல்டு' வழங்கப்படும்'' என்றும் மாநிலச் செயலாளர் சாதிக் அறிவித்தார். இந்த பரிசு தரும் அறிவிப்புக்களைக் கேட்ட செயற்குழு உறுப்பினர்கள் அல்லாஹு அக்பர்' என்று கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

'மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகம் கிளையின் வரவு - செலவு கணக்குகளை கேட்டுப் பெறவேண்டும். இதே போன்று மாவட்ட நிர்வாகம் வரவு - செலவு கணக்குகளை மாநில நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநில நிர்வாகம் வரவு - செலவு விபரங்களை மாநிலப் பொதுக்குழுவின்போது சமர்ப்பிக்கும். இது பொருளாதர விஷயத்தில் ஜமாஅத்தின் தூய்மையை நிரூபிப்பதாக அமையும்'' எனப் பொருளாதார ஒழுங்குகள் குறித்து மாநிலப் பொருளாளர் சையத் இப்ராஹிம் விளக்கினார்.

மாநில நிர்வாகிகளின் உரைகளைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் குறை நிறைகளைச் சொல்ல அனுமதிக்கப்பட்டனர். வரிசையாக மேடைக்கு வந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மாநிலத் தலைமை மீது இருக்கும் குறைகளை எடுத்துக் கூறியும் ஜமாஅத்தின் பல்வேறு பணிகளில் புதிய ஆலோசனைகளையும் வழங்கினர்.

செயற்குழு உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்ட குறைகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்ட மாநில நிர்வாகிகள் வரும் காலங்களில் அனைத்துக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தகுதியான ஆலோசனைகளையும் செயல்படுத்த தலைமை முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய மாற்றங்களையும் தாஃவா மற்றும் சமுதாயப் பணிகளில் புதிய வேகத்தையும் எதிர்பார்த்தபடி செயற்குழு உறுப்பினர்கள் புதிய உத்வேகத்தோடு கலைந்து சென்றனர். பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் இம் மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.



செயற்குழு தீர்மானங்கள்





தீர்மானம் - 1


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக அறிவித்த பின்பும் இன்றுவரை இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாக முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை. இடஒதுக்கிட்டிற்கான சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத்துறை பொதுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை? இதில் 3.5 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். மாறாக வெள்ளை அறிக்கை வெளியிடாமல் தமிழக அரசு கடந்த காலங்களைப்போல் காலந்தாழ்த்துமேயானால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.கவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் சூழ்நிலை ஏற்படும் என இச்செயற்குழு தி.மு.க அரசை எச்சரிக்கிறது.



தீர்மானம் - 2


கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இது குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பேசிவந்தன. இது ஒருபுறமிருக்க சச்சார் கமிட்டி முஸ்லிம்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டி முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்தது. இனியும் இடஒதுக்கீடு வழங்காமல் முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே அறிவித்தபடி 4-11-08 அன்று தமிழகத்திலுள்ள தென்னக ரயில்வே அலுவலகங்களின் முன்பு தமிழகம் தழுவிய மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்தும் என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 3


முஸ்லிம்களுக்கு கல்விக்கடன் சிறுதொழில் கடன் போன்றவற்றை வழங்கும்போது வட்டியில்லா முறையிலேயே கடனுதவி வழங்கப்பட வேண்டும் என்கிற முஸ்லிம்களின் நெடுநாளைய கோரிக்கையை மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது. மேலும் சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு கடன் உதவி வழங்கும்போது அதற்குண்டான வட்டித் தொகையை மாநில அரசே செலுத்துகிறது. இதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசும் தமிழக முஸ்லிம்களுக்கு கடனுதவி வழங்கும்போது அதற்குரிய வட்டியை தமிழக அரசே செலுத்த வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 4


இந்திய முஸ்லிம் சமுதாயத்தை களங்கப்படுத்தியும் காயப்படுத்தும் வகையிலும் முஸ்லிம் தீவிரவாதிகள்' இஸ்லாமிய பயங்கரவாதம்' என்பது போன்ற கண்டனத்திற்குரிய சொல்லாடலை பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தும் நோக்கத்திலும் பத்திரிக்கை தர்மத்தை காலில் போட்டு மிதித்து சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் இந்திய ஊடகங்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அதோடு சமீபத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் செய்து வெளியிட்ட இந்தியா டுடே இதழை முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5


அடிப்படை உரிமைக்ளுக்காக போராடும் முஸ்லிம் மக்கள் மீது காவல்துறையினர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவது தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. நியாயத்திற்காக போராடும் முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்து அச்சுறுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தமிழக காவல்துறை உடனடியாக நிறுத்தாவிட்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று காவல்துறையை எச்சரிக்கிறது.



தீர்மானம் - 6


முஸ்லிம் சமுதாயம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மதுரை வக்ஃபு கல்லூரியில் பல ஆண்டு காலமாக தற்காலிக விரிவுரையாளர்களாக பணியாற்றிவரும் முஸ்லிம்களை புறக்கணித்து விட்டு சுயநல ஆதாயங்களுக்காக தகுதியில்லாத கல்வி நிலையிலும் அனுபவத்திலும் மேற்படி விரிவுரையாளர்களைவிட பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லிமல்லாதவர்களை வக்ஃபு வாரியக் கல்லூரியில் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்ய முடிவெடுத்திருக்கும் மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி நிர்வாகம் மற்றும் வக்ஃபு வாரியத் தலைவரை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு விரிவுரையாளர்கள் நியமன விவகாரத்தில் தலையிட்டு கல்வித் தகுதி அனுபவம் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முஸ்லிம் களை நியமிக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 7


தமிழகமெங்கும் பரவலாக வக்ஃபு சொத்துக்கள் அரசியல்வாதிகளாலும் தனி நபர்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வக்ஃபு சொத்துக்கள் முஸ்லிம்களுக்கு பயன்படாமல் போகிறது. இத்தகைய வக்ஃபு சொத்துக்களை மீட்காமல் அலட்சியம் காட்டி வரும் வக்ஃபு வாரியத்தை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 8


தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தண்டனைக் கைதிகளாக இருந்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை எதிர்வரும் அண்ணா பிறந்தநாளின்போது விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 9


தமிழக அரசிடம் உலமா ஓய்வூதியம் கோரி நிலுவையிலிருந்த 200 விண்ணப்பதாரர்களுக்கு உலமா ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து 2400 உலமாக்களுக்கு ரூபாய். 750 வீதம் வாழ்நாள் முழுவதும் இனி ஓய்வூதியம் கிடைக்கும். இதற்காக தமிழக அரசை இச்செயற்குழு பாராட்டுகிறது. அதேசமயம் தகுதியுள்ள ஏனைய உலமாக்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க. வழிவகை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 10


இந்தியத் திருநாட்டின் அரசியல் சட்ட மாண்புகளுக்கும் லட்சியங்களுக்கும் களங்கம் ஏற்படுவதைக்கூட பொருட்படுத்தாமல் இந்தியக் குடிமக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தியாவின் பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றின் மீது அமெரிக்காவிற்கு மேலாதிக்க உரிமையை வழங்குவதற்கான முன் ஏற்பாடே என்று இச்செயற்குழு கருதுகிறது. இதனால் அமெரிக்காவின் வல்லாதிகம் இந்தியாவின் மீது ஏற்பட வழிவகுத்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 11


புதுவை யூனியன் பிரதேச முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. புதுவை காஙகிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகித தனி இட ஒதுக்கீட்டிற்கான தீர்மாத்தை புதுவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பின்பும் தனி இடஒதுக்கீடு வழங்காமல் புதுவை முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. இது விஷயத்தில் புதுவை காங்கிரஸ் முதல்வர் போர்க்கால அடிப்படையில் தனி இடஒதுக்கீடு கிடைக்க விரைந்து செயலாற்ற வேண்டும் என புதுவை முதல்வருக்கு பலமுறை சுட்டிக்காட்டியும் ஒரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஆகவே எதிர்வரும் புதுவை சட்டமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரின்போது புதுவை சட்ட மன்றத்தை முற்றுகையிட்டு மாபெரும் உரிமைப் போராட்டத்தை நடத்துவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 12


இந்துத்துவா வெறியர்களால் 450 ஆண்டுகால பாபர் மஸ்ஜித் தரைமட்டமாகப்பட்டு 16 ஆண்டுகள் கழிந்து விட்ட பின்பும் பாபர் மஸ்ஜித் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே பாபர் மஸ்ஜித் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசு மற்றும் உச்சநீதி மன்றத்தையும் கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் - 13


நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்திய குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை விசாரணை அமைப்புகள் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து இத்தகையை அசம்பாவித சம்பவங்கள் இனியும் நிகழாதவாறு எச்சரிக்கையாக செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு மனித நேயத்திற்கு எதிரான குண்டு வெடிப்பு சம்பவங்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 14


இதுவரை நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மும்பை கோவை அக்ஷர்தம் ஆகிய தாக்குதல் சம்பவங்களில் மட்டும்தான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டில் நடந்த பெரும் பாலான குண்டு வெடிப்புகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மத்திய அரசு இத்தகைய சம்பவங்களில் எந்த இயக்கத்தை அல்லது மதத்தை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதை கண்டு பிடித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 15


குஜராத் மாநிலம் சூரத் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் குஜராத் மாநில அரசே வெடிக்காத குண்டுகளை செட்டப் செய்து அதைக் கண்டுபிடிப்பது போன்று நாடகம் நடத்தி பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். இந்த வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணை வைக்க உத்தரவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 16


முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசு இது குறித்த நடைமுறைகளில் போதிய கவனம் செலுத்தாததால் முஸ்லிம் மாணவ மாணவிகள் இந்த உதவித் தொகையை பெற முடியாத சூழ்நிலையே உள்ளது. இது விஷயத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு அறிவுறுத்தி முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

செய்தி : TNTJ இணைய தளம்

0 comments: