தமிழில் குர்ஆன், ஹதீஸ் நூல்கள் Download
நாளை வளைகுடா நாடுகளில் ஈத் பெருநாள்!
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் மாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. இன்று சவுதி அரேபியா மற்றும் அமீரகத்தின் பகுதிகளில் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ( செவ்வாய் 30 - செப்டம்பர்-2008) ஈத் பண்டிகை வளைகுடா பிரதேசங்களில் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நாளை மறுநாள் ஈத் கொண்டாடப்படும் என்று தெரிகின்றது.
பதிவர்கள் அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம்
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
* பெருநாள் தொழுகைக்கு முன், பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
* பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, "பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கக் கூடாது. பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.
ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறினேன். அதற்கு அவன் "எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்'' என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். "அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' எனக் கூறினேன். "அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்தினார்கள்'' என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.
எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது.
திரட்டும் பணி பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்துள்ளது.
ஃபித்ரா தர்மத்துக்காகத் திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஒருவன் வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551 வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் முன் அதை விநியோகித்து விட வேண்டும்.
ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்
ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
"ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும்'' என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள். (புகாரி 1395, 1496, 4347)
"அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.
அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?
முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.
இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். "இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்...
(நூல்: புகாரி 6979)
பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.
மேலும் ஏழைகளுக்கு உணவாகப் பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வசதி படைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.
இஸ்லாம் தற்கொலைத் தாக்குதல்களை ஆதரிக்கின்றதா?
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1364
யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1365
தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!
போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.
போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூ- கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.
உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூ- கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப் பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.
போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.
விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.
தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.
ஆனால் ஒரு முஸலிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப் பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.
இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.
பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.
போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.
புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப் படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப் பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன.
அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 15036, 15037)
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.
முன்னர் அனுமதிக்கப் பட்டு பின்னர் தடைசெய்யப் பட்டதால் தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள்.
ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொது மக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.
மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப் படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.
அப்பாவிகள் கொல்லப் படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்-ம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் படுகின்றது.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப் படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.
மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.
ரமழான் மாதத்தின் சிறப்புகள்!
"ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்-ம் (1956)
"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்கள்: புகாரீ (1899), முஸ்-ம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்தச் செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!
"ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன'' என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.
மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
இந்தக் கருத்தை முஸ்-ம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்து விட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன'' என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகின்றன.
"ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது; ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.
இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நபி (ஸல்) அவர்களே சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
"யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 1903
இந்த நபிமொழி, நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டார் என்ற செய்தியும் (பார்க்க: புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.
கூடுதல் நன்மைகளைப் பெற்றுத் தரும் மாதம்
மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூ-யை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும்.
"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுôறு மடங்கு வரை கூ- வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ- வழங்குவேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ர-)
நுôல்: முஸ்-ம் (2119)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதன் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்கள்: புகாரீ (1901), முஸ்-ம் (1393)
உம்ரா செய்தால் ஹஜ் நன்மை
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
"ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-)
நூல்கள்: புகாரீ (1782), முஸ்-ம் (2408)
சுவர்க்கத்தில் தனி வாசல்
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.
"சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ர-)
நூல்: புகாரீ (1896), முஸ்-ம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
"நோன்பு நரகத்தி-ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நுôல்: புகாரீ (1894)
"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நுôல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
இம்மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட, இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)
எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களைச் செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
தீன்குலப் பெண்மணி
சின்னஞ் சிறு குழந்தைகளின் அழகு மொழிகள்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அழகுச் சிறுமி குர்ஆன் ஓதும் அழகு
சிறு குழந்தை குர்ஆன் ஓதும் அழகு
மெக்ஸிகோவோச் சேர்ந்த இரு இளைஞிகள் இஸ்லாத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு சான்று கூறும் காட்சி
வீடியோ தெரியாதவர்கள் வீடியொவீன் மீது டபுள் கிளிக் செய்து பார்க்கலாம்.
ஆடம்பரத் திருமணத்தை ஒழிப்போம்!
மனிதன், தனது ஆடை பிறரைக் கவர வேண்டும் என்பதற்காகப் பல கடைகள் ஏறி இறங்கி வாங்குகிறான். கா-ல் அணியும் செருப்பைக் கூட வாங்கும் போது, இது நன்கு உழைக்குமா? தரமானதா? என்று பார்த்துப் பார்த்து வாங்குகின்றான். இவ்வாறு கைக்குட்டையி-ருந்து காலணி வரை பல மணி நேரங்களை செலவழித்து பார்த்துப் பார்த்து வாங்கும் மனிதன், மறுமைக்காக எந்த ஒன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதில்லை. அதனால் தான் நமது சமூகத்தில் வரதட்சணை என்னும் உயிர்கொல்- தலைவரித்து ஆடுகின்றது.
தனது பிள்ளையின் திருமணத்தை ஊர் மெச்ச வேண்டும், அது அழியா நினைவாய் மக்கள் முன் இருக்க வேண்டும், என்றும் இந்தத் திருமணத்தைப் போல் வேறு எந்தத் திருமணத்தையும் பார்த்ததேயில்லை என்று மக்கள் புகழாரம் சூட்டவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே!
அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த சுன்னத்தைப் பின்பற்றி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவது மகிழ்ச்சியா? இல்லை, பணத்தை இறைத்து ஆடம்பரத்தை முகஸ்துதிக்காகக் காட்டி அந்த ஒரு நாள் மட்டும் பெறும் இன்பம் பெரிதா? சிந்தியுங்கள்!
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும் என்ற நபிகளாரின் நபிமொழியை நீங்கள் உற்று நோக்கியது உண்டா?
நபிவழியின் அடிப்படையில் திருமணத்தை எளிமையாக நடத்துங்கள் என்று கூறினால், "திருமணம் என்பது வாழ்நாளில் ஒரு தடவை வரக் கூடியது; அதனால் அது மிகப் பெரிய இன்பமாக இருக்க வேண்டும்' என்று கூறுகின்றார்கள்.
மனிதன் மூலம் கிடைக்கும் இன்பத்தை விட இறைவன் மூலம் கிடைக்கும் பரகத், இவர்களுக்குக் குறைவாகத் தெரிகிறது. திருமணத் தம்பதிகளுக்கு முதன் முதல் கிடைக்க வேண்டியது இறைவனின் அருள் தான். அது எளிமையாக நடக்கும் திருமணத்தில் தான் கிடைக்கும் என்று நபிகளார் கூறிய பிறகும் ஆடம்பரத் திருமணத்தை எந்த முஸ்-மும் தேர்ந்தெடுப்பானா?
இறைவனின் அருள் இருந்தால் தான் திருமணத்திற்குப் பிறகு நடக்கும் சோதனைகள், பிரச்சனைகளி-ருந்து தம்பதிகள் விடுபட முடியும். இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. தங்களது பிள்ளைகள் திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? இறையருள் பெற்று இன்பம் பெற வேண்டாமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்!
ஆடம்பரத் திருமணத்தை நடத்துபவர்களே! திருமணத்தைக் கானல் நீராய் பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைக் கன்னியரை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஆடம்பரத் திருமணங்கள், அதனால் ஏற்படும் செலவுகள், ஏழைகளையும் இவ்வாறு திருணம் செய்ய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர்கள் திருமணம் என்பதையே வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.
ஆடம்பரத் திருமணத்தை நடத்த விரும்புவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எண்ணிப் பார்க்கட்டும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38)
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
நீங்கள் ஷைத்தானின் நண்பராக வேண்டுமா? அல்லது இறையருளைப் பெறுவோராக மாற வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ரமழானை வரவேற்போம்! இன்று முதல் ரமழான் ஆரம்பம்!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவுபடுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதீனமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
"இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது எப்படி நோன்பு விதியாக்கப் பட்டதோ அதே போன்று உங்கள்மீதும் நோன்பு விதியாக்கப் பட்டுள்ளது. நீங்கள் அதன்மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்" (அல் பகரா 2:183)
ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ, பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். "பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேகமூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படவில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
ரமழான் மாதத்தின் சிறப்பு: 'ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய , சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல்குர்ஆன் அருளப்பெற்றது. உங்களில் எவர் அம்மாத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்' ( அல்பகரா 2:185) ' ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்' (புஹாரி).. இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல்குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக் கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல்குர்ஆனை படிப்பதன்மூலம் , அதனை ஆராய்வதன் மூலம், அதன்வழி நடப்பதன்மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன்மூலம் அதன்பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது சிறப்பு: 'ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தாங்கள் விலங்கிடப்படுகின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முத்தபகுன் அலைஹி)
மூன்றாவது சிறப்பு : 'ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப் படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
நான்காவது சிறப்பு : 'ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜூம்ஆவிலிருந்து மற்றொரு ஜூம்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர ' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஐந்தாவது சிறப்பு : ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:
1- நோன்பு பரிந்து பேசும்: ' நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும் , 'நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன், இவன் விசயத்தில் பரிந்துரைப்பாயாக '! அல் குர்ஆன் கூறும் 'நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன். எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
2- நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ' நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன் , அதேபோன்று ஒன்றுமில்லை' எனக் கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நஸாஈ)
3- கணக்கின்றி கூலி வழங்கப்படும்: ' ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழுநூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும் , நானே அதற்கு கூலி வழங்குவேன் ' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி)
4- நோன்பின் கூலி சுவர்க்கம்: ' நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில்வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள். அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டுவிடும் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
5- நரகத்தை விட்டு பாதுகாப்பு: ' எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்துவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி , முஸ்லிம்)
6- ' நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்)
7- முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ' எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
8- மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ' வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும் , மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி , முஸ்லிம்)
9- நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: 'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று- அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது- (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி , முஸ்லிம்)
10- கஸ்தூரியை விட சிறந்த வாடை: ' எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர்.இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாகமிருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.
ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள் நிய்யத்தின் அவசியம்: ' எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ). பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ' நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா' ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் ( ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபிவழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். 'நமது விசயத்தில் எவர்கள் புதிய விசயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்). நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ' நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள். நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி). 'நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) ' ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும் , அதை நீங்கள் விட்டுவிடவேண்டாம். ஒரு மிடரு த்ண்ணீரையாவது குடிப்பதைக் கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள்மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவறவிடுவது கவலையான விசயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும் , நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:
'எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும் , நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம்வரை நன்மையில் இருக்கின்றனர் ' என நபி (ஸல்) கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி) நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப் படுத்துபவர்களாவர் ' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதி)
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓதவேண்டிய பிரார்த்தனை:
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
' தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'
பொருள்: தாகம் தீர்ந்து விட்டது, நரம்புகள் நனைந்து விட்டன, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின்படி உறுதியாகிவிட்டது ' இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.
ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு: ' எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் , திர்மிதி)
இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால ( இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் , நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது' என கூறினார்கள். (புஹாரி) ' எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும் , நன்மையை எதிர்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
உம்ரா செய்வது:
'எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி , முஸ்லிம்)
ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விசயங்கள்: அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது , மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது , நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது , ஸதகாக்கள் கொடுப்பது. 'நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை) யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் ' (புஹாரி)
ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை: பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது , அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும். 'எவன் பொய் சொல்வதையும், அதன்படி நடப்பதையும், விட்டுவிடவில்லையோ அவன் பசியோடும் , தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை , என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி) ' எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக்கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத் , இப்னுமாஜா). நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் அந்த உயரிய பண்புகளைஅடைய முயற்சிப்போமாக!